Mudiarasan biography of albert
முடியரசன்
முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்க் கவிஞர். மரபுக்கவிதைகளை எழுதியவர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முதன்மையானவர்.
பிறப்பு, கல்வி
முடியரசனின் இயற்பெயர் துரைராஜ். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி இணையருக்கு அக்டோபர் 7, 1920-ல் பிறந்தார்.
தன் தாய்மாமன் துரைசாமியின் இல்லத்திலேயே வளர்ந்தார். துரைசாமி முறையான கல்வி இல்லாதவரானாலும் மரபிலக்கியங்களில் பயிற்சியும் புலவர்களிடம் நட்பும் கொண்டவர். அவரிடம் இளமையில் இலக்கியங்களைக் கற்றார். பெரியகுளம் தெற்கு அக்கிரகாரத்தில் இருந்த திண்ணைப்பள்ளிக்கூடத்திலும் பின்னர் வாகம்புளி என்னும் ஊரில் இருந்த திண்ணைப்பள்ளியில் பயின்றார்.
1927-ல் அவர் பெற்றோர் பிழைப்பு தேடி சிவகங்கைக்கு சென்றார்கள்.
அங்கே வேந்தர்பட்டி ஆரம்பப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே கற்பித்த வேங்கடராமையர் என்னும் ஆசிரியரிடம் இருந்து தமிழிலக்கணம், தமிழ்ச்செய்யுள்களை பயின்றார்.
Presidential libraries mapமேலைச்சிவல்புரி சன்மார்க்க சபை நடத்திவந்த தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து தமிழ்ப்படிப்பை தொடர்ந்தார். அங்கே புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் படித்தார். ஆறாம்படிவத்தில் முதல்மாணவராக வந்து ஆறுமுகநாவலர் எழுதிய நன்னூல் காண்டிகை உரை நூலை பரிசாகப் பெற்றார்.
தமிழ்ப் பண்டிதருக்குரிய பிரவேச வகுப்பில் சேர்ந்தார். மேலைச்சிவல்புரி பள்ளிக்கு வருகை தந்த மு.
கதிரேசன் செட்டியார், ரா.ராகவையங்கார் , சுவாமி விபுலானந்தர்உமாமகேஸ்வரனார் போன்றவர்களின் உரைகளைக் கேட்டு தமிழறிவை பெற்றார். மேலைச்சிவபுரி ’வித்துவான் கணேசர் செந்தமிழ்க்கல்லூரி’யில் 1939 முதல் 1943 வரை பயின்று பண்டிதருக்கான பிரவேசத்தேர்வில் முதலிடம் பெற்றார். சென்னை பல்கலை கழகம் நடத்திய தமிழாசிரியருக்கான தேர்விலும் 1943-ல் முதலிடம் பெற்று வென்றார்.
மேலைச்சிவல்புரி சன்மார்க்க சபை கணேசர் தமிழ்க்கல்லூரியில் அவருக்கு மீ. முத்துசாமிப் புலவர், ம.லிங்கசாமி, வை.சுப்ரமணிய ஐயர், வீர செல்லப்பனார், பு.ரா.மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் தமிழ் கற்பித்தனர்.
தனிவாழ்க்கை
முடியரசன் சிறிதுகாலம் குழிபிறை என்னும் ஊரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
1946-ல் அவருக்கு வித்வான் பட்டம் கிடைத்தது. 1947-ல் சென்னை முத்தியாலுப்பேட்டை அரசுப்பள்ளியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார். 1949 வரை அங்கே தமிழாசிரியராக பணியாற்றினார். காரைக்குடி மீனாட்சிசுந்தரனார் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி 1978-ல் ஓய்வுபெற்றார். அதன் பின் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் 1985 முதல் 1986 வரை சிறப்புப்பேராசிரியராக பணியாற்றினார்.
அங்கே நாடகக் காப்பியப் பணியில் ஈடுபபட்டார்.
முடியரசன் பிப்ரவரி 2, 1949-ல் கலைச்செல்வி என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். (கலைச்செல்வியின் இயற்பெயர் சரஸ்வதி. திருமணத்தின்போது தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டது) அவர்களுக்கு பாரி, குமணன்,செல்வம் என்னும் மகன்களும் குமுதம், அன்னம், அல்லி என்னும் மகள்களுமாக ஆறு வாரிசுகள்.
இவருடைய மகன் பாரி முடியரசன் எழுத்தாளர். தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.
அரசியல்
முடியரசன் நேரடியாக அரசியலில் ஈடுபட்டதில்லை என்றாலும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகவே நீடித்தார்.
இலக்கியவாழ்க்கை
முடியரசன் கல்லூரியில் படிக்கும்போதே சி.என்.அண்ணாத்துரை, பாரதிதாசன் இருவராலும் கவரப்பட்டிருந்தார்.
1939-ல் திருப்பத்தூருக்கு வந்த சி.என்.அண்ணாத்துரையின் பேச்சைக் கேட்டு திராவிட இயக்க ஆதரவாளரானார். 1941-ல் தன் 21-வது வயதில் 'சாதி என்பது நமக்கு ஏனோ?’ என்னும் தன் முதல் கவிதையை பெரியகுளம் துரைராசு என்ற பெயரில் திராவிடநாடு இதழுக்கு அனுப்ப அது வெளியாகியது. பின்னர் தன் பெயரை முடியரசன் என்று மாற்றிக்கொண்டார்.
சென்னையில் ஆசிரியராக பணியாற்றும்போது போர்வாள், அழகு, முருகு போன்ற இதழ்களுடன் தொடர்புகொண்டு அவற்றில் கவிதைகள் எழுதினார்.
பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களின் பட்டியலில் அவர் பெயர் பாரதிதாசனின் பாராட்டுக்குறிப்புடன் வந்தபின் புகழ்பெற்றவரானார். சென்னையில் மயிலை சிவமுத்து, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், வாணிதாசன் ஆகியோருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
திரைப்படவாழ்க்கை
முடியரசன் திரைத்துறையில் பணியாற்றியிருக்கிறார்.
கண்ணாடி மாளிகை என்னும் படத்தில் பாடல்கள் எழுதினார். ஆனால் அத்துறை தனக்கு ஒத்துவரவில்லை என விலகிவிட்டார்
விருதுகள்
- 1950 - முத்தமிழ் விழாவில் பாரதிதாசன் தன் அழகின் சிரிப்பு கவிதை நினைவாக நடத்திய போட்டியில் முதற்பரிசு
- 1954 - மாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள்
- 1966 - தமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம்
- 1973 வீரகாவியம்’ காவிய நூலுக்குப் பரிசு – தமிழ்நாடு அரசு
- 1079 ‘பாவரசர்’ பட்டம், ‘பொற்பேழை’ – தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர்
- 1983 - தமிழ்ச்சான்றோர் விருது
- 1988 - கலைஞர் விருது
- 1989 - தமிழக அரசின் பாவேந்தர் விருது
- 1993 - ராஜா முத்தையா செட்டியார் விருது
- 1998 - கலைமாமணி விருது
மறைவு
முடியரசன் டிசம்பர் 4, 1998-ல் மறைந்தார்
நாட்டுடைமை
முடியரசனின் படைப்புகள் 2000-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
ஆய்வுகள் நினைவுநூல்கள்
வாழ்க்கைவரலாறு
- முனைவர் இரா.மோகன், "இந்திய இலக்கியச்சிற்பிகள்- முடியரசன்", சாகித்திய அகாதெமி, புதுடெல்லி (2006)
- பாரி முடியரசன், "கவிதைக்குப் பிறந்த மகன்", அண்ணாமலை பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம் & கலைஞன் பதிப்பகம் (2016)
- பாரி முடியரசன், " என் தந்தை முடியரசன்", மணிவாசகர் பதிப்பகம், சென்னை (2016)
ஆய்வுகள்
- முனைவர் ஸ்ரீகுமார், "முடியரசன் படைப்புகள் ஓர் ஆய்வு", சுபா பதிப்பகம், நாகர்கோவில் (1993)
- முனைவர் மு.இளங்கோவன், " பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு", வயல்வெளிப்பதிப்பகம், கங்கைகொண்ட சோழபுரம் (1996)
- கவிஞர் மனோ.இளங்கோ, "கவியழகில் முடியரசன்"(2007)
- பேரா.சே.செந்தமிழ்ப்பாவை, முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்- "வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம்-தேசியக்கருத்தரங்க ஆய்வுக்கோவை"- நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரி & வீறுகவியரசர் அவைக்களம்
- பாரிமுடியரசன், "இவர்தாம் முடியரசர் வீறுகவியரசர்"- மணிவாசகர் பதிப்பகம்,சென்னை (2019)
- கவிஞர் சென்னிமலை தண்டபாணி, "திராவிட இயக்கத்தின் வானம்பாடி கவியரசர் முடியரசன்" -வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி (2019)
- முனைவர்.தமிழ்முடியரசன், "மாணவச்செல்வங்களே.." - வீறுகவியரசர் நூற்றாண்டு வெளியீடு, மாணவர் செயற்களம், காரைக்குடி-1 (2019)
- க.
திருநாவுக்கரசு (1999) திராவிட இயக்கத் தூண்கள், நக்கீரன் பதிப்பகம், பக் 167-183
இலக்கிய இடம்
முடியரசன் பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர். சமூகக்கருத்துக்களையும் அரசியல்கருத்துக்களையும் பொதுவாசகர்களுக்காக நேரடியாக யாப்பில் , சந்தத்துடன் முன்வைப்பவை அவருடைய கவிதைகள். மரபான அணிகள், சொல்நயம் கொண்டவை.
புதிய அரசியல்-சமூகக் கருத்துக்களை தமிழின் மரபான மொழி எதிர்கொள்வதன் சித்திரங்கள் அவற்றிலுள்ளன. தடையற்ற மொழியொழுக்கு கொண்டவை. முடியரசன் கவிதைகளில் பூங்கொடி குறுங்காவியம் குறிப்பிடத்தக்கது.
நூல்கள்
- முடியரசன் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு) 1954
- காவியப் பாவை 1955
- கவியரங்கில் முடியரசன் “ 1960
- பாடுங்குயில் “ 1983
- நெஞ்சு பொறுக்கவில்லையே “ 1985
- மனிதனைத் தேடுகிறேன் “ 1986
- தமிழ் முழக்கம் “ 1999
- நெஞ்சிற் பூத்தவை “ 1999
- ஞாயிறும் திங்களும் “ 1999
- வள்ளூவர் கோட்டம் “ 1999
- புதியதொரு விதி செய்வோம் “ 1999
- தாய்மொழி காப்போம் “ 2001
- மனிதரைக் கண்டு கொண்டேன் “ 2005
- பூங்கொடி (காப்பியம்) 1964
- வீரகாவியம் “ 1970
- ஊன்றுகோல் “ 1983
- இளம்பெருவழுதி (நாடகக் காப்பியம்) 2008
- எக்கோவின் காதல் (சிறுகதைத் தொகுப்பு 1999
- அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) 1999
- இளவரசனுக்கு “ 1999
- முடியரசன் தமிழ் இலக்கணம் (இலக்கணம்) 1967
- எப்படி வளரும் தமிழ்?
(கட்டுரைத்தொகுதி) 2001
- பாடுங்குயில்கள் “ 1975
- சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் “” 1990
- பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறூ) 2008
- முடியரசன் தமிழ் உரை நூல் (பாடநூல்) 1961
- தமிழ்ச் சோலை “ 1966
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:00 Road